மழைசோறு – புதிய விடியல்

சாரல் மழை

இரு சக்கர வாகனத்தில், கடுமையான வெய்யிலில் நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது திடீரென வானம் கருத்து சில பெரிய துளிகள் முகத்தில் விழும் போது சாரலில் இருந்து தப்பிக்க ஏதாவது கூரையின் கீழ் ஒதுங்கும்போது, நிறைந்த மண் வாசனை இறுகிய மனதுக்கு இதமானதாகவும்,  சுகமாகவும் இருக்கும். எனது கிராமத்தில் கடந்த காலங்களில் மழையோடு தொடர்புடைய  நினைவுகள் வானவில் போல சில நிமிடங்கள் வந்து செல்லும்.

விவசாயம்

இப்பவெல்லாம் ஊர்ல மழை இல்லாமல் நிலம் வரண்டு போய் விவசாயம் பார்த்த தலைமுறை ஓய்ந்து போனது.  மழைக்கு மஞ்சள் சோளம் விதைப்பதும் , தென்னந்தோப்பு வளர்ப்பும் தான் இப்ப ஊர்ல விவசாயம்.

பாண்டியன் குலம் & அந்துவன் குலம்

ஆறு இல்லா ஊரு அழகு இல்லை அப்படின்னு ஔவை பாட்டி பாடிட்டு போயிருக்கு. நொய்யல்  ஓரமா இருக்கிற எங்க ஊரு அப்ப அழகுதான். செந்தேவி பாளையம் என்று பேர். எழுபது , எண்பது குடும்பம் வாழுற ஒரு சின்ன கிராமம். ஊர்ல பாண்டியன் குலத்தவரும் அதற்கு அடுத்தபடியாக அந்துவன் குலத்தாரும் மற்றவரும் எப்பவும் மாமா மச்சான்னு கலகலப்பா இருக்கும். சில பரம்பரை பகையும் இன்று வரைக்கும் உண்டு

பாண்டியன் குலத்து காரங்க எல்லாரையும் ஐயா, ஆத்தா, பெரியப்பா சித்தப்பா, அத்தை, அண்ணன், தம்பி என்று கூப்பிடும்போது நமக்கு எவ்வளவு சொந்தகாரங்க இருக்காங்கன்னு ஆச்சரியமா இருக்கும்.

சில தலைமுறை இடைவெளியினால் என்னை விட 30, 40 வருடம் பெரியவர்களுக்கு நான் அய்யன் முறையாகிறேன். அதே மாதிரி என்னை விட 30, 40 வயது பெரியவர்கள் எனக்கு மகன் முறை. அந்துவன் குலம் அப்புறம் மத்தவங்கள அப்புச்சி, அம்மச்சி, மாமா, சித்தி, அத்தைனு   கூப்பிடுவோம்.

கொஞ்சம் வருஷமா மழை குறைந்து விவசாயம் பட்டு போயிடுச்சு. தீவனம்  இல்லாததால்  ஆடு, மாடுகளை வித்திட்டு தண்ணீர் கலந்த பாலை காலையும் , சாயங்காலமும் சில பால்காரரிடம் வாங்கறவங்களில் எங்க கிராமம் அடக்கம்.

ஆடி மாசம் மழைக்கு மஞ்சள் சோளம் விதைத்து ரொம்ப வருஷம் ஆச்சு. புரட்டாசியில் வரும் மழைக்குத்தான் இப்போ உழவு போடுறாங்க. பருவம் மாறி மழை பெய்வதால் பயிறு நல்லா வளராமல் கருது மிணுங்காமல் முழங்கால் ஒசரம்  வளர்ற பயிரை அறுவடை செய்யாமல் மாட்டை கட்டி மேய விடும் நிலைமை தான் இப்ப இருக்காங்க.

மழை சோறு

புரட்டாசி மாசமும் மழை இல்லாமல் கிணற்றில் தண்ணீர் குறைந்து வறட்சி ஏற்படும்பொழுது .ஊர்ல இருக்கின்ற ஆத்தாக்கள் & அம்மச்சிகள் எல்லாம் ஒன்று கூடி பேசி மழைசோறு எடுக்கலாம்னு முடிவு பண்ணுவாங்க.

ஒரு அகப்பையும் , பெரிய மண் பானையையும் எடுத்துட்டு ஊர்ல இருக்கிற பொடி பசங்க, புள்ளைங்க எல்லாரையும் கூட்டிட்டு ஒவ்வொரு வீடா போவாங்க. ஒவ்வொரு வீட்டுக்குப் போகும் போதும் ஒரு ஆத்தா நடுவுல பானையோடு நிற்க, மத்தவங்க சுத்தி நின்னு அகப்பையை கையில் வைத்து நிக்கிற ஆத்தாவை பார்த்து பசிக்குது சோறு போடுங்கன்னு கேட்க, அந்த ஆத்தா வானம் பொய்த்து போச்சு, தானியம் எதுவுமே இல்லை , சோறு இல்லைன்னு சொல்ல உடனே கூட வந்த சின்ன பசங்க பசிக்குது சோறு போடுங்க என்று அழுவது மாதிரி நடிக்கணும். [ இல்லைனா அகப்பைல அடி விழும் ]. அப்புறம் எல்லாரும் சேர்ந்து வருண பகவானை வேண்டி மனமுருகி  பாட்டு பாடி ஆடுவார்கள். அப்புறம் அந்த வீட்டிலிருந்து பழைய சோறு வாங்கி பானையில் ஊத்தி விட்டு அடுத்த வீட்டுக்கு போவார்கள். இப்படி எல்லாம் வீட்டுக்குப் போயி பழைய சோறு வாங்கிட்டு பிள்ளையார் கோவில் போய் திரும்பவும் வருண பகவானையும் மற்ற சாமிகளை வேண்டி பாடி கும்மி அடித்து ஆடுவார்கள்.

இப்பவும் ஊருல வெளியூர்ல இருந்து எங்க ஊருக்கு கண்ணாலம் கட்டி வந்த ஆத்தாக்களை அந்த ஊர் பேர் சொல்லி கூப்பிடுற பழக்கம் இருக்கு. உதாரணமா காரணம்பேட்டை ஆத்தா, அம்மா பாளையத்து ஆத்தா, வடுக பாளையம் ஆத்தா,  காசிகவுண்டன் புதூர் ஆத்தா, மாதப்பூர் ஆத்தா  அப்படின்னு தான் சொல்லுவாங்க.

பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு முடித்தபின் நொய்யல் ஆற்றுக்கு பாட்டுப்பாடியபடி வரிசையா போவாங்க. அங்க மறுபடியும் எல்லா சாமியையும்  வேண்டிகிட்டு, முதல்ல குழந்தைகளுக்கு பானையிலிருந்து பழைய சோறு கொடுப்பாங்க. ஒவ்வொரு தடவையும் ஒரு அகப்பைத்தான்  கிடைக்கும் அப்புறம் பெரியவர்களுக்கு.

பழைய சோறு என சொன்னாலும்  அன்றைக்கு  காலையில்  செய்த சாப்பாட்டை தான் மோரைக் கலந்துதருவாங்க. சிலவருடங்களுக்கு  முன்  மழைசோறு எடுத்து மூன்றாவது நாள் ஊர்ல நல்ல மழை வந்துச்சு. மழைசோறு எடுத்ததால் மழை வந்துச்சானு எனக்கு சொல்ல தோணல, ஆனா அவங்க நம்பிக்கை இன்னும் காலம் காலமா அப்படியே தான் இருக்கு. வறட்சிக் காலத்தில் ஊர்ல பகிர்ந்து சாப்பிடணும்னு முன்னோர்கள்  நினைத்திருப்பார்கள். டெக்னாலஜி, சோசியல் மீடியா, ஸ்மார்ட்போன் இருந்தாலும் உள்ள இருக்கின்ற  கிராமத்தான் அப்பப்ப எட்டி பார்ப்பது உண்டு. அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். சாரல் நின்னு  ரோட்டில் வெள்ளம்  வடிவது குறைந்ததும்  மறுபடியும் எனது பயணம் எப்பவும் போல தொடர்கிறது.

Leave a Comment

Scroll to Top