புதிய விடியல்:
அன்று 18.04.2015. மதியம் முதலே மாமாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் இல்லை. சரியாக இரவு 10.30 நான் மாமாவின் அருகில் அமர்ந்திருந்தேன். நெருங்கிய உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். அத்தை சிறிதளவு நீரை மாமாவிற்கு கொடுத்தார். தண்ணீர் உள்ளே இறங்கவில்லை. பாதி நீர் வெளியே வந்தது. பல்லை கடித்து கொண்டார். வாய் கோணலாக மாறியது. மிகவும் சிரமத்துடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்த அவரது உடல் அசைவின்றி அமைதியானது.
முதன்முறையாக ஒரு ஆன்மா உடலை விட்டு வெளியே வரும்போது உடன் இருந்தேன். அந்த கடைசி இரண்டு நிமிடங்கள் மீண்டும் மீண்டும் என் நினைவில் வந்து செல்கிறது இன்றளவும். 1995 ஆண்டுக்கு பிறகு நமது வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதை நன்கு உணரமுடிகின்றது. உறவுகளுக்கிடையேயான நெருக்கடிகள், உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய், மன அழுத்தம் மற்றும் மனச் சிதைவு என்று மிக மோசமான நம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பணம் சார்ந்த தேவைகளும் அதற்கான மதிப்பும் மனிதத்தை மட்டுமல்ல மனிதனின் உடல்நிலை, உறவுகள் போன்றவற்றையும் பெருமளவில் பாதித்துள்ளது.
அழிவின் பாதையில் மிக வேகமாக போட்டி போட்டுக்கொண்டு செல்கின்றோம். அனைத்தும் வர்த்தகமயமானது குற்றமில்லை. ஆனால் அதனுடன் தரமில்லாத, மோசமான வழிமுறைகள் மிகவும் ஆபத்தானவை. வழக்கம்போல் எல்லாவற்றையும் குற்றம் சாட்டி விட்டு நாம் எதையும் மாற்றாமல் இருப்பதைவிட நல்ல உணவு, தரமான கல்வி, சுகாதாரம் மற்றும் தரமான பொருள்களை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். செலவு குறைந்த நமது கடந்த கால மருத்துவ முறைகளையும், வேளாண் முறைகளையும் தீர்க்கமாக ஆராய்ந்து காலத்திற்கேற்ப மாற்றி லாபமடைய செய்தால் நிச்சயம் நம் மக்கள் மாற்றத்தை விரும்புவார்கள்.
வெற்று அறிவுரையை விட நடைமுறை வெற்றி அவர்களை மீண்டும் ஆரோக்கியமான சூழலுக்கு கொண்டுவர பெரிதும் உதவும் நன்றி.
– தமிழ்செல்வன்
புதிய விடியல்